திங்கள், 21 நவம்பர், 2016

கருணாநிதியின் காமராஜர் கவிதை

அரசியல் களத்தில் காமராஜரை தோற்கடித்தவரும் தி மு க தலைவரும் முன்னாள் தமிழ் நாடு முதல் அமைச்சருமான மு கருணாநிதி எழுதிய காமராஜர் கவிதை!


பெருந்தலைவா!
இன்றைக்கு உன்றன் பிறந்த நாள் - கொள்கைக்
குன்றுக்கு எங்கனும் திருவிழா!
விருதையில் பிறந்த வீரனாய் வளர்ந்தாய்!
சரிதையில் நிறைந்த  தலைவனாய் நின்றாய்!
சிறையின் கொடுமையும் சித்ரவதையும்
சினத்த முகத்துடன் ஏற்ற தியாகி!
ஆயிரம் உண்டு கருத்து மோதல் - எனினும்
அழியாத் தொண்டு மறந்திடப் போமோ?
தமிழ் நிலம் மணக்க வந்த திருவே!
அமிழ்தெனும் பொதுப்பணியின் உருவே!
கருத்திருக்கும் காலமெல்லாம் உழைப்பதற்கு!
கதராடை மேனிதனை அலங்கரிக்கும்!
கதறுகின்ற ஏழைகளை கை அணைக்கும்
கட்சி தலைவருக்கோ இன்னலென்றால் துடித்திடுவாய்!
பெரியார் கல்லறையில் உன் கண்ணீர்!
பேரறிஞர் மூதறிஞர் மறைந்த போதும் உன் கண்ணீர்!
பெருமானே உனக்காக எம் கண்ணீர்!
பேராற்று பெருக்கனவே பாய்ந்ததன்றோ?
தனிமனிதன் வாழ்வல்ல உன் வாழ்வு!
தன்மான சரித்திரத்தின் அத்தியாயம்!
இமயம் முதல் குமரி வரை உன் கொடி பறக்க
கோலமிகு தமிழகத்தின் புகழ் பொறித்தாய்:
குணாளா! குலக்கொழுந்தே! என்று பண்பின்
மணாளர் எங்கள் அண்ணன் உனை அழைத்தார்,
பச்சைத்தமிழன் என பகுத்தறிவுத் தந்தை
இச்சையுடனே உனை உச்சி முகர்ந்தார்,
கருப்புக் காந்தியென உன்னை - இந்தக்
கடல் சூழ் நாடு கைகூப்பித் தொகுத்தன்றோ!
வாழ்க்கையின் ஓரத்தில் நீ எம்மிடம் வாஞ்சையும்
காட்டினாய்- உன்
வாழ்க்கையே ஒரு பாடமாய்
அனைவருக்கும் நிலை நாட்டினாய்!
இன்றைக்கு உன்றன் பிறந்த நாள் -
என்றைக்கும் அது சிறந்த நாள்! 

2 கருத்துகள்: