பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை நிகழ்வுகள் , மனித வாழ்வின் நற்குணங்களுக்கு ஆதாரமாக அமைவதால் , அவர் வாழ்வு மனிதருக்கெல்லாம் , வாழ்வின் இலக்கணமாக ஏற்கபடுகிறது . அவர் காட்டிய பாதையில் நாமும் நடந்து நல் வாழ்வு வாழுவோம்.
இப்போது அவர் வாழ்வின் நிகழ்ச்சிகளையும் அது தரும் நற்குணங்களையும் பார்ப்போம் .
இப்போது அவர் வாழ்வின் நிகழ்ச்சிகளையும் அது தரும் நற்குணங்களையும் பார்ப்போம் .
1. பிறர் பொருளை தனதாக்காமை!
காமராஜர் சிறு வயதில் துணி கடையில் வேலை பார்த்தபோது , ஒரு பெண்மணி , துணி வாங்கிய பின்பு, மீதி பணம் ஒரு ரூபாயை வாங்க மறந்து சென்று விட்டார். ஆனால் காமராஜர் ஓடோடி சென்று அந்த பெண்ணிடம் ஒரு ரூபாயை ஒப்படைத்தார்.
பிறர் பொருள் மீது ஆசை வேண்டாம் என்று வாழ்ந்து காட்டினார். நாமும் அப்படி செய்வோமா?
2. இக்கட்டான நேரத்தில் யோசித்து செயல்படுதல்! .
விருதுநகரில் கோயில் யானை மதம் பிடித்து ஓடிய போது மற்றவர்கள் பயந்து ஓடிய போதும், தைரியமாக நின்று யோசித்து யானை ஓடுவதன் காரணம் அறிந்து, ஓடோடி கோயிலுக்கு சென்று யானையை கட்டும் சங்கிலியை எடுத்து வந்து , யானை முன் வீசி எறிந்தார், யானை அமைதி ஆனது.
கடுமையான இக்கட்டிலும் தைரியமாக , நிதானமாக அறிவு கொண்டு யோசித்து செயல் பட வேண்டும் என்று வாழ்ந்து காட்டினார். நாமும் அப்படி செய்வோமா?
3.சமத்துவம் பேணி வாழ்தல் !
பள்ளியில் படித்த போது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு , அனைத்து மாணவர்களும் ஒரு ஆனா கொடுத்தனர். சுண்டல் பங்கிடும் போது சிலர் முந்தி அடித்து வாங்கியதால், காமராஜருக்கு கொஞ்ச சுண்டல் மட்டுமே கிடைத்தது.அவர் பாட்டி ஏன் குறைவான சுண்டல் இருப்பதாக கேட்ட போது, அனைவரும் சமமான பணம் கொடுத்த போது , சமமாக பங்கிடாதது ஆசிரியரின் தவறு என்று சொன்னார்.
பிற்காலத்தில் முதல்வரான போது , தனியார் பள்ளி ஆசிரியர்களும் அரசாங்க பள்ளி ஆசிரியர் பெரும் சமமான ஊதியம் பெற செய்தார்.
இவ்வாறு சமத்துவ சமுதாயம் படைக்க , சமத்துவத்தை நிலைநாட்டி வாழ்ந்து காட்டினார். நாமும் அப்படி செய்வோமா?
4. எடுத்த காரியத்தில் கடைசி வரை பின் வாங்காமல் நின்று செயல் படுதல்!
. உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்டு, தெலுங்கானா மாநிலம் பெல்லாரி அலிப்பூர் ஜெயிலில் அடைக்க பட்டபோது, அவர் பாட்டி உடல் நலம் குன்றியதால், அவரை தற்காலிகமாக விடுவிக்க, அவர் தாய் மாமா கோரியபோது, அதை ஏற்க மறுத்து , தண்டனை காலம் முழுமையும் ஜெயிலில் கழித்து, கொண்ட காரியத்தில் முழுமையாக தன்னை ஈடு படுத்தி கொண்டார்.
இப்படி எடுத்த காரியத்தில் கடைசி வரை பின் வாங்காமல் நின்று செயல் பட்டு, வாழ்ந்து காட்டினார். நாமும் அப்படி செய்வோமா?
5. தலை கனம் கொள்ளாமல் தாழ்மையுடன் வாழ்தல் !
சுமார் 2 ஆண்டு கால சிறை தண்டனை காலம் முடிந்து, ஊருக்கு வந்த போது, அவர்தான் விருதுநகரில் முதல் விடுதலை போராட்ட வீரர் என்பதால் , அவருக்கு மாலை மரியாதை செய்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். மக்கள் அளித்த வரவேற்பை கண்டு மகிழ்ந்த போதும் , அவர் நன்றி தெரிவித்து பேசியதாவது."உங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி.நீங்கள் அளித்த கௌரவத்தால் எனக்கு தலைக்கனம் வந்து விட கூடாது என்று எனக்காக இறைவனிடம் நீங்கள் வேண்டிட வேண்டும் " என்பதாகும்.
இப்படி தாம் எப்போதும் தலை கனம் கொள்ளாமல் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டினார். நாமும் அப்படி செய்வோமா?
6.கயவர்களை கண்டு பயப்படாமல் எதிர்த்து நின்றல்!
.விருதுநகரில் இரவு அடிக்கடி திருட்டு போவதை அறிந்து , திருடர்களை பிடிக்க திட்டமிட்டார் காமராஜர். இரவில் திருடர் வரும் பாதையில் ஒரு கயிற்றை சாலையின் குறுக்காக பிடிக்க செய்தார். திருடன் இருட்டில் வந்து கயிற்றில் தட்டி விழுந்த போது , மிளகாய் பொடியை அவன் கண்களில் தூவி , பிடித்து கொடுத்தார்.
அப்படி கயவர்களை கண்டு பயப்படாமல், எதிர்த்து நின்று வாழும் முறையை செயல்படுத்தி ,காட்டி வாழ்ந்து காட்டினார்.நாமும் அப்படி செய்வோமா?
7. மனிதரில் உயர்வு தாழ்வு பாராமை!
குமரன் என்ற சிறுவனை, சாதி காரணம் சொல்லி, விருதுநகர் மாரியம்மன் கோயிலுக்குள் விட மறுத்த போது , அதை எதித்து முறியடித்து கோயிலுக்குள் அனுமதித்தார் காமராஜர்.
பின்னாளில் முதல்வரான போது சாதி காரணத்தால் கோயிலுக்குள் செல்ல முடியாத பரமேஸ்வரனை இந்து அற நிலைய துறை அமைச்சராக்கி , மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை என்று நிலைநாட்டி வாழ்ந்து காட்டினார்.
நாமும் அப்படி செய்வோமா?
8. திறம்பட உழைத்தால் குருவையும் மிஞ்சலாம்!
1936 ஆம் ஆண்டு தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக, காமராஜரின் குரு சத்தியமூர்த்தி செயல் பட்டார். காமராஜர் செயலாளராக செயல் பட்டார். பின்பு 1940 ஆம் ஆண்டு நடந்த கட்சி தேர்தலில்தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜர் வெற்றி பெற்றார்.சத்தியமூர்த்தி செயலாளராக செயல் பட்டார். குருவின் ஆசியும் பெற்றிருந்தார்.
இப்படி திறம்பட செயல் பட்டால் குருவையும் மிஞ்சலாம் என்று நிரூபித்து, வாழ்ந்து காட்டினார். நாமும் அப்படி செய்வோமா?
9. நம்மை எதிர்த்தவருக்கும் நன்மை செய்தல்!
1954 ஆம் ஆண்டு , முதலமைச்சர் பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி சுப்ரமணியத்துக்கும், அவரை முன்மொழிந்து தனக்கு எதிராக செயல்பட்ட பக்தவச்சலத்துக்கும், தான் வெற்றி பெற்ற பின்பு மந்திரி பதவி வழங்கி , அரசியலில் தன்னை எதிர்த்தவர்கள் மேல் துவேசம் காட்டாமல் நன்மை செய்து வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டினார். நாமும் அப்படி செய்வோமா?
10.நன்றி மறக்காமல் வாழ்தல்!
இந்தியா சுதந்திரம் அடைந்த போது, தனது குரு சத்தியமூர்த்தி வீட்டுக்கு முதலில் சென்று நன்றி செலுத்தினார்.தான் முதல்வரான போதும் தனது குருவின் வீட்டுக்கு முதலில் சென்று மரியாதை செய்தார். தான் கட்டிய கட்சி அலுவலகத்துக்கு சத்ய மூர்த்தி பவன் என்று நன்றியோடு பெயர் சூட்டினார்..
இப்படி தனது வாழ்நாள் முழுவதும் நன்றி மறக்காமல் வாழ்ந்து காட்டினார்.
நாமும் அப்படி செய்வோமா?
11.அர்பணிப்பால் , ஆள்பவரின் நிலை அடைதல்!
அதிகம் படிக்காத சிறுவனாக இருந்த போது சுதந்திர போரில் ஈடுபட்டு ஆங்கில அரசை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார் , அதற்காக சிறை சென்றார்.பின்பு உழைப்பால், உயர்ந்த பதவியான முதல்வர் பதவியை அடைய முடியும் என்று நிரூபித்து காட்டினார். ஆங்கில அரசி இந்தியா வந்தபோது , அரசி நின்றிருக்க அருகில்முதல்வர் காமராஜர் உட்கார்ந்து இருக்கும் காட்சி இன்றும் நம் கண்ணில் நிற்கிறது.
இப்படி அர்ப்பணிப்போடு உழைத்தால் ஆள்பவர்களின் நிலை அடைய முடியும் என்று நிரூபித்து, வாழ்ந்து காட்டினார்.நாமும் அப்படி செய்வோமா?
12. உழைப்பால் அன்றி பதவியால் அல்ல பெருமை என்றறிதல்!
கட்சியை வளர்க்க வேண்டிய நிலை வந்தபோது , தானே முன்வந்து முதல்வர் பதவியை 1963 ஆம் ஆண்டு துறந்து, பதவியால் அல்ல தனக்கு பெருமை! என்று நிலை நாட்டினார். 8 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாதபோதும் அவர்1975 ஆம் ஆண்டு இறந்தபோது வந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது , பதவியால் அல்ல பெருமை தனக்கு என்று மீண்டும் நிரூபித்து காட்டினார்.
உழைப்பால் அன்றி பதவியால் அல்ல பெருமை என்றறிவோமா?
13. பகிர்ந்துண்டு வாழ்தல்!
தான் முதல்வராக இருந்தபோது கிடைத்த வருமானத்தை, தனது தாய்க்கு 150 ரூபாய் அனுப்பிய பின்பு, தனது வீடு வாடகை மற்றும் மாத செலவு போக , மீதி பணத்தை அநாதை இல்லமான பாலவிகார் பள்ளிக்கு கொடுத்தும், தன்னை நாடி வரும் மற்றவர்களுக்கும் கொடுத்தும் வாழ்ந்து வந்தார் . சேர்த்து வைக்கும் முறையை வைத்திருக்கவில்லை. தான் முதல்வராக இருந்தபோது அவர் போக்குவரத்து செலவு பணத்தை பெற தகுதி இருந்தும், அதை பெற மறுத்து விட்டார்.
இப்படி பணத்தை சேர்த்து வைக்காமல் இருந்ததுடன், தனது சம்பளத்தின் மீதி பணத்தை பகிர்ந்து கொடுத்து வாழ்ந்து காட்டினார். நாமும் அப்படி செய்வோமா?
14. பிரச்சினையை எதிர்கொள்ள பழகுதல்!
காமராஜர் முதல்வராக இருந்தபோது, தனது அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சொன்னது."எவ்வளவு பெரிய பிரச்னை ஆனாலும் எதிர் கொள்ளுங்கள் , உங்களால் முடிந்த அளவு நன்மை செய்யுங்கள்." என்பதே.ஆதலால்தான் அவரிடம் எடுத்து சென்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் விடை சொன்னார்.அவர் விடை சொல்லாத ஒரு பிரச்சினை கூட இல்லை என்று சொல்லும் வண்ணம் ஆட்சி நடத்தினார். மாநிலங்கள் பிரிவினை ஆகட்டும் ,மதிய உணவு திட்டம் ஆகட்டும் அது. இன்று நாம் சந்திக்கும் பிரச்சினைகள் அவர் ஆட்சிக்கு பின்னல் வந்து விடை காண முடியாமல் இருப்பதே ஆகும்.
அவர் கண்ட வெற்றிகள் எல்லாம் அவர் பிரச்சனைகளை நேரடியாக எதிர்கொண்டதாலே பெற்றது ஆகும்.
இப்படி பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழ்ந்து காட்டினார். நாமும் அப்படி செய்வோமா?
15.மனிதருக்கு தேவை சட்டங்கள். சட்டங்களை விட மனித நலனே முக்கியமாக கொள்தல்!
ஒரு சிறுவனின் கண் விபத்தில் பழுதடைந்த போது , குறிப்பிட்ட நாள்களுக்குள் லண்டன் செல்ல சட்டம் மறுத்த போது , சட்டம் மனிதருக்கே அன்றி சட்டத்துக்காக மனிதர் இல்லை என்று சொல்லி , சட்டத்தை தாண்டி ஏற்பாடுகள் செய்து சிகிச்சை அளிக்க சிறுவனை உரிய நாளில் வெளிநாடு அனுப்பினார்.
இப்படி மனித நலனே முக்கியம் என்று வாழ்ந்து காட்டினார்.நாமும் அப்படி செய்வோமா?
16.அஹிம்சையும் தேசியமும் கடைபிடித்து வாழ்தல்!
காமராஜர் சிறு வயது முதல் இந்த நாட்டின் விடுதலைக்கு உழைத்து ,விடுதலை பெற்ற பிறகு முதல்வராகி உழைத்த போதும் தனக்காக என்று ஒருபோதும் நினைத்து எதையும் செய்யவில்லை. அப்படி சுயநலமில்லாமல் அவர் எடுத்த முடிவுகள் மக்கள் நலனையே கொண்டதாகும். அது கண்டிப்பாக சரியாகவே இருக்கும். அப்படி அவர் நடந்து கொண்டதால், அவர் கடை பிடித்த அகிம்சை வழியும், தேசியமும் நமது தமிழ் நாட்டு மக்கள் கடை பிடிக்க வேண்டும். ஸ்ரீ லங்காவில் நமது தமிழ் மக்கள் நடத்திய ஆயுத யுத்தத்தை இங்குள்ளோர் ஆதரித்ததால் , அவர்கள் மிக பெரிய அழிவை சந்தித்த போது , இவர்களால் அவர்களை காக்க முடிய வில்லை!. விளைவு தமிழ் சமுதாயத்தில் 21 ஆம் நூற்றாண்டில் மிக பெரிய உயிர் இழப்பு ஏற்பட்டது. .ஆதலால்தான் காமராஜர் நம் மக்களுக்கு எது சரியானது என்று உணர்ந்து முன்பே அகிம்சையையும் தேசியத்தையும் நெஞ்சில் தாங்கி வாழ்ந்து காட்டினார். நாமும் அப்படி செய்வோமா?