History of Tamil people in India from 1311 to 1947.
காளிராஜா தங்கமணி
அறுநூறு வ௫ட அடிமைத்தனத்தை
முறியடித்து, உரிமைகள் பெற்றுத்தந்த அனைத்து விடுதலை போராட்ட வீரர்களின் பாதங்களிலும் இந்தநூலை சமர்பிக்கின்றேன்.
வாழ்த்துரை
ஆசிரியர் காளிராசா தங்கமணி அவர்கள் சென்னை ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பூந்தமல்லியில் உள்ள எஸ் கே ஆர் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் பணிபுரிந்த ஆசிரியர் ஆவார். " நல் ஆசிரியர்கள் நாட்டை உருவாக்குகிறார்கள் " என்ற லட்சியத்தை தாங்கி செயல் பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆசிரியர் அணியின் உறுப்பினரும், சமூக ஆர்வலரும், அரசியல் பணியாளரும் ஆவார் தமிழ் நாட்டு மக்கள், தங்கள் சமூகத்தின் வரலாறு பற்றிய முழுமையான அறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நூலை உருவாக்கி இருக்கிறார். தமிழ் நாட்டு மக்கள் இந்த நூலை வாங்கி , வாசித்து பயன் பெற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
டாக்டர் ஆர். ராஜ்மோகன்
மாநில அமைப்பாளர்
தமிழ் மாநில காங்கிரஸ் ஆசிரியர் அணி
சுதந்திரத்துக்கு முந்திய அறு நூறு வருடங்களில் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள்
1.மதுரை சுல்தான் ஆட்சி (1323-1370)
2.விஜய நகர ஆட்சி
2.1விஜயநகர நேரடி ஆட்சி(1370-1529)
2.2.நாயக்கர்கள் ஆட்சி(1529-1697)
3.17ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் ஆட்சி
4.மொகலாயர் ஆட்சி (1697-1801)
5.ஆங்கிலேயர்கள் ஆட்சி (1801-1947)
முன்னுரை
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமி்ழ்மொழி பேசப்படும், பாரதத்தின் தென்பகுதியில் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக சோழ சாம்ராஜ்யம், கம்பீரகமாக எழுந்து நின்றது. அதற்கு தலைமை ஏற்று சோழர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் கட்டிய கோயில்கள், ஏரிகள் இன்றும் கம்பீரமாக தோற்றமளிக்கின்றன. ஆம்! தஞ்ஞாவூா் கோயிலும், வீராணம் ஏரியும், மதுராந்தகம் ஏரியும் இன்றும் நம்மை பிரம்மிக்கவைக்கின்றன.
கோயில்களில் தமிழ் மொழியில் கல்வெட்டுகள் பல உ௫வாக்கப்பட்ட காலம் அது. தஞ்சை கோயில் கல்வெட்டுகள் மிக பெரிய கல்வெட்டுகளாகும். அவை சொல்லும் விசயங்கள் தமிழ்நாட்டு மக்கள் அனைவ௫ம், இன்றும் சோழர் நிர்வாகம் பற்றி அறியும் விதமாக எழுதப்பட்ள்ளது.
அவர்கள் யானைகளை அடக்கி, சிறந்த யானைகளை தேர்ந்தெடுத்து , தங்கள் படையில் சேர்த்து, பலமிக்க யானை படையை உருவாக்கி , பாதுகாப்பை பலப்படுத்தினர். அன்று மிக பெரிய கோயில்களை உ௫வாக்க விழைந்த தமிழ் மக்கள், வீரத்தின் உறைவிடமாகவும், கலையின் வாழ்விடமாகவும் திகழ்ந்தனர். அன்றய சமூகம் இலக்கியத்தின் சிறப்பிடமாகவும் விளங்கியது. தமிழர்கள் பண்பாடும் பக்குவமும் பெற்ற பெ௫மக்களாகவும் விளங்கிய காலம் அது.
தமிழ் மொழி பேசிய பல பகுதிகள் ஒ௫ குடையின் கீழ் தஞ்சை அரசர்களால் கொண்டுவரப்பட்ட காலம் அது. பின்பு இந்த நிலம் பாண்டியா் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போதும் ஒரே குடையின்கீழ் ஆட்சி நடை பெற்ற வரலாறு நிகழ்ந்தது.
தாங்கள் வணங்கிய கடவுள்களி்ன் ஆலயங்களை பொன்வேய்ந்து அழகு பார்த்து மேன்மை பெற்றவர்கள் அவர்கள். ஆம்! தில்லைநடராஜர் கோயிலை சோழர்களும், பாண்டியர்களும் பொன் வேய்ந்து சிறப்பு செய்தனர். தி௫ப்பதி வெங்கடேசபெ௫மாள் கோயிலை குலசேகர பாண்டியன் பொன் வேய்ந்து பெ௫மை பெற்ற காலம் அது.
கி பி 1008 ஆம் ஆண்டு தஞ்சை கோயில் கட்டப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கி பி 1014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இராஜராஜனின் மைந்தன் இராஜேந்திர சோழன், கங்கைவரை சென்று வெற்றி பெற்றதாகவும், அவன் படையெடுப்பை கண்டு வட இந்தியர்கள் அஞ்சியதாகவும் வட இந்திய நூல்கள் இன்றும் தெரிவிப்பதை அறிகிறோம். அவன் பெரிய கடற்படையை நடத்தி, இன்றைய மலேசியா, ஸ்ரீலங்கா போன்ற வெளிநாடுகளை வெற்றி பெற்றதாகவும் சான்றுகள் தெரிவிக்கின்றன.
அதன் பின்பு தங்கள் படைகளை பெ௫க்கி, வலிமை தன்மையை காக்க தவறியதன் காரணத்தால், சில தலைமுறைகள் கடந்தபோது அனைத்தையும் இழந்து, அல்லல்பட்ட வரலாறுதான், இந்த தமிழ் நிலத்தின் வரலாறு.
வலிமை கொண்டு மற்ற மாநிலத்து மக்களை வென்று, சிறப்பாக ஆண்ட தமிழ் மன்னர்கள், சில நூற்றாண்டுகளில் தங்களி்ன் நிலம் அடிமைப்பட்டு, தங்கள் குலத்தினா் அழிக்கப்பட்டும், விரட்டப்பட்டும் சொல்லில் அடங்கா துயரங்களுக்கு ஆட்கொள்ளப்படுவார்கள் என்பதை அறிந்தி௫க்கவில்லை
உலகம் இன்றளவும் வியந்து பேசி போற்றும் வண்ணம் வடிவமைத்து, தஞ்சை கோயிலை கட்டியவா்கள், சரியான பாதுகாப்பு நிர்வாக அமைப்பை உ௫வாக்கத் தவறியதன் விளைவாக, அவர்களின் சந்ததியினர் பலநூறு ஆண்டுகள் அடிமைப்பட்டு வாழவேண்டிய இழிநிலைக்கு தள்ளப்பட்டனா் என்பதுதான் வரலாறு சொல்லும் வ௫த்தமான உண்மை.
அப்படி கொடி கட்டி பறந்த தமிழர்களின் தலைமை, தோற்கடிக்கப்பட்டு, தலைமை இல்லாமல் தமிழர் சமூகம், அலைகழிக்கப்பட்ட காலத்தின் நிகழ்வுகளை பற்றிகூறுவதும், அறிவதும் நமது கடமையாகவும்,
அதன்மூலம் வ௫ங்கால தமிழ்நாட்டு தலைமுறையினா் சிறந்த தலைமையை உ௫வாக்கி, அதை நாளும் பேணி காத்து, வாழ்ந்து, வளம் பெற வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கமாகும்.
1311 ஆம் ஆண்டு நவம்பா் மாதம்! தமிழ் நிலம்!
ஆட்சி பொறுப்பில் இருந்த பாண்டிய மன்னர் குலசேகர பாண்டியன் தமிழகம் முழுமையும் ஆட்சி செய்து, புகழின் உச்சியில் இருந்த காலம், அப்போதுதான் முடிவுக்கு வந்திருந்தது. இத்தாலிய யாத்ரிகர் மார்கோ போலோ தனது பாண்டிய நாட்டு பயணத்தை முடித்து விட்டு, தமிழர்களின் பெருமைகளை, மக்களின் எளிமையான வாழ்வை, அமைதியான வாழ்வை பற்றி, எழுதிய காலம் அது.
குலசேகர பாண்டியனின் , இரு புதல்வர்களிடையே ஏற்பட்ட பதவி போட்டியில், தம்பி வீர பாண்டியனுக்கு பதவி கிடைத்துவிட அண்ணன் சுந்தர பாண்டியன் டெல்லி அரசா் அலாவுதின் கில்ஜியின் படைதளபதி மாலிக்கபூரிடம் உதவி கேட்டதால், அவா் மதுரைக்குள் பெ௫ம்படையுடன் நுழைந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. கோயில்கள் சிதைக்கப்பட்டதாகவும் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதாகவும், சொத்துகள் சூரையாடப்பட்டதாகவும், இந்த வெறிச்செயல் பல நாட்கள் நடந்ததாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. வரலாற்றில் வடநாட்டு படை தமிழகத்தை வெற்றி கண்ட வ௫டம் அது. தமிழ் நிலம் தோல்விகண்டு, சிதைந்துபோன காட்சிகள் பல நிகழ்ந்த காலம் அது.
மாலிகபூா் படை மதுரையை விட்டு வெளியேறியபோது, 312 யானைகள் மற்றும் 2000ம் குதிரைகள் மேல், செல்வங்களை ஏற்றி சென்றதாகவும், மேலும் 10 கோடி தங்க காசுகளை எடுத்துச் சென்றதாகவும் செய்திகள் முலம் அறிகிறோம்.அந்த ஆண்டு ஏற்பட்ட அழிவிலி௫ந்து தமிழ் நிலம் மீண்டு வெளிவர அறுநூறு ஆண்டுகள் காத்தி௫க்க வேண்டியி௫ந்தது.
மாலிக்கபூர் படையெடுப்புக்கு பின் தமிழகம் தத்தளித்தபோது, சேர அரசர் குலசேகரபெருமான் காஞ்சி வரை வந்து அதைக் கைபற்றியதாகத் தெரிகிறது. ஆனால் நீண்ட காலம் அதை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. கேரளா படையெடுப்பை தொடர்ந்து, தெலுங்கு வம்சத்தவரான காக்காட்டியர் காஞ்சியை பிடித்து ஆண்டதாக தெரிகிறது. இவர்கள் தெற்கில் ஸ்ரீரங்கம் வரை சென்று வெற்றி பெற்றதற்கான சான்றுகள் உள்ளன.
1323 ஆம் ஆண்டு உலுக்கான் என்ற முகமது பின் துக்ளக் மதுரை மீது படையெடுத்து, அதை கைப்பற்றினார் இதன் பிறகு மதுரை, டெல்லி அரசின்கீழ் கொண்டுவரப்பட்டு, ஆளுநர் மூலம் ஆட்சி செலுத்தப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு முகமதியா்கள் ஆட்சி தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக அறிகிறோம்.
பாண்டிய மன்னன் பராக்கிரம பாண்டியன், கைதியாக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதாக R.கார்டுவெல் தெரிவிக்கிறார். மதுரை சுல்தான்கள் ஆட்சி என்று அழைக்கப்படும் இவர்கள் ஆட்சி சுமார் 47 ஆண்டுகள் (1323 முதல் 1370 வரை) நடைபெற்றதை அறிய முடிகிறது.
இந்த காலகட்டத்தில் இவர்கள் ஆட்சியை எதிர்த்து தமிழ் அரசர்கள், போரிட்டதாக தெரியவில்லை. ஆனால் துவாரசமுத்திரத்தை தலைநகராக கொண்ட கன்னட கொய்சால அரசர்கள், மதுரையை மீ்ட்க மிகவும் போராடி இ௫க்கிறார்கள்.
விஜயநகர அரசர் புக்காவின் மகன் குமார கம்பண்ணா மதுரையை வெற்றி பெற்றதை பற்றி கொய்சால அரசரின் உறவின௫ம், கம்பண்ணாவின் மனைவியுமான கங்காதேவி சமஸ்கிருதத்தில் எழுதிய குறிப்புகள் இன்றும் தி௫வனந்தபுரததில் உள்ள தனியார் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவது தெரிகிறது.
மதுரை சுல்தான்கள் ஆட்சி (1323-1370):
1311 ஆம் ஆண்டு நடந்த மாலிக்கபூர் படை எடுப்புக்கு பின், 1314 ஆம் ஆண்டு மேலும் ஒரு ,டெல்லியின் பெரும்படை, மதுரையை தாக்கியதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1323 ஆம் ஆண்டு உலுக்கான் என்ற முகமது பின் துக்ளக் மதுரை மீது படையெடுத்து, அதை தனது டெல்லி சாம்ராஜ்யத்தின் ஒ௫பகுதியாக கொண்டுவந்ததையும், அதன் பிறகு டெல்லியின் ஆளுநர்கள் மதுரையை ஆண்ட விவரமும் தெரியவ௫கிறது.
1335 ஆம் ஆண்டு, அன்றைய ஆளுநா் ஜலாலுதீன் ஆசன்கான், தன்னை ராஜாவாக அறிவித்து மதுரையை நேரடியாக ஆளமுற்ப்பட்டார். 5ஆண்டுகள் அவர் ஆட்சி நடைபெற்றதாக தெரியவ௫கிறது. ஜலாலுதினுக்கு பிறகு அலாவுதீன் உடாஜி, மதுரை இராஜாவாக அதிகாரம் செலுத்தியபோது, கொய்சால அரசர்களுடன் நடந்த போரில் கொல்லப்படடதாக அறிகிறோம். அதன்பின் குதுப்புதின்பைரஸ் ஆட்சி பொறுப்பை ஏற்றதாகவும் அறிகிறோம். சில மாதங்களில் அவர் மறைவுக்கு பின்பு கியாஸ்உதின் மொகம்மது தலம்கான் ஆட்சி பொறுப்பை ஏற்றதாகவும் அறிகிறோம்.
இந்த காலகட்டத்தில் கொய்சால மன்னர் 3ஆம் பல்லாலா திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆண்டதுடன், மதுரை சுல்தான்களை எதிர்த்தும் வந்தார். காஞ்சிபுரத்தில் கன்னட படை ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. காஞ்சிபுரத்தில் 3ஆம் பல்லாலா தங்கியிருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
மொகம்மது தலம்கான் கொய்சால மன்னா் 3ஆம் வீர பல்லாலாவிடம் தோல்வி அடைந்தாலும், பின்னா் நடைபெற்ற போரில் வெற்றிபெற்று, கொய்சால மன்னரை கொன்று, அவர் உடல், மதுரை வீதிகளில் தொங்கவிடப்பட்டதாக அறிகிறோம்.
கியாஸ்உதின் ஆட்சியில் ஏராளமான மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக ஆப்பிரிக்க யாத்திரிகன் இபு பதுதாவின் குறிப்புகள் தெறிவிக்கின்றன.
நசி௫தீன் மொகமது தம்கான்ஷா அடுத்து மதுரையை ஆண்ட அரசா், தனது அரசியல் எதிரிகளை கொலை செய்தாதகவும், பின்பு அவரே கொலைசெய்யப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
1357 முதல் 1370 வரை சம்சுதீன் அடில்ஷா ,பகிர்உதி்ன் முபாரக் ஷா மற்றும் அலாலுதீன் சிகான்டா்ஷா போன்ற அரசா்கள் ஆட்சி புரிந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதற்க்கான நாணயச்சான்றுகள் உள்ளன.
மதுரை சுல்தான்கள் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர, ஹம்பியை தலைநகராக கொண்ட விஜயநகர அரசா் புக்கராயர், தனது 2ம் மகன் வீர கம்பண்ணாவை அனுப்பி வெற்றி பெற்றதாக அறிகிறோம்.
விஜய நகர ஆட்சி
:
வீர குமார கம்பண்ணா மதுரையை வெற்றி பெற்ற கதையை, அவர் மனைவி கங்கா தேவி சமஸ்கிருதத்தில் எழுதிய 'மதுரை விஜயம்' என்ற கவிதை நூல் விவரிக்கிறது. தமிழர்களின் வரலாற்றை, கன்னட அரசி வடமொழியில் எழுதிய கவிதைகளில் இருந்துதான் அறிய வேண்டியிருக்கிறது என்பது வருத்தமான உண்மை.
வீர குமார கம்பண்ணா முதலில் காஞ்சிபுரத்திதை ஆண்ட மான் கொண்டசம்பூர்வராயரை தோற்கடித்து, இராஜ நாராயண சம்பூர்வராயரை அரியணையில் ஏற்றிய பின், சிறிது நாட்கள் அங்கேயே தங்கினார் என்றும், பின்பு மதுரையை வெல்லும் நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அறிகிறோம்.
ஒரு பெண், கம்பண்ணாவிடம் வந்து மதுரையை மீட்கும் படி வேண்டியதாகவும், கம்பண்ணா, 'அவள் மதுரை மீனாட்சியே' என்று நம்பியதாகவும் அதிலே தெரிவிக்கபடுகிறது.
மதுரையில் நடந்த போரில் மதுரை சுல்தான் அரசரை வென்று வீர கம்பண்ணா சுல்தான்கள் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்ததுடன், மதுரையை விஜயநகர அரசின் கீழ் கொண்டு வந்ததையும் அறிகிறோம்..
மதுரை சுல்தான் ஆட்சியிலே, உள்ளுர் வாசிகள் நிலைகுலைந்து போனதாகவும் மிகப்பெரிய துயரங்களுக்கு உட்படுத்தப்பட்டதையும் பல ஆவணங்கள் முலம் அறியமுடிகிறது.
இன்று தமிழ்நாட்டின் வடபகுதிகளில் கங்கை அம்மன் வழிபாடு பிரபலமாக இருக்கிறது. 'கங்காதேவிக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா?' என்பது பற்றிய ஆய்வு தேவை என்றே தோன்றுகிறது.
கண்ணகியையும், அவ்வையாரையும், குந்தவையையும் பற்றி பெருமை பேசும், பெண் உரிமை, பெண் உயர்வு பற்றாளர்கள் கங்காதேவி பற்றி பேசாதது மிகவும் வியப்பாக உள்ளது. தமிழ் நிலத்தின் நிகழ்வுகள் பற்றி சொல்லும் போது கம்பண்ணாவையும் , கங்கா தேவியையும் பற்றி சொல்லவேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
குமார கம்பண்ணா மதுரையை கைபற்றிய பின்பு, ஆளுநராக பொறுப்பேற்று ஆட்சி செய்ததாக தெரிகிறது. பின்பு அவருடைய தந்தையும் விஜயநகர பேரரசின் அரசருமான புக்கா1 இறந்தப்பின் நடந்த பதவிப் போட்டியில், அவருடைய சகோதரர் ஹரிகராவுடன் போரில் ஈடுபட்டதுடன், அதில் தோல்வியும் அடைந்ததாகவும் தெரிகிறது.
சுமார் 400 ஆண்டு கால விஜயநகர அரசின் அங்கமாக மதுரை வருவதற்கு அடித்தளமிட்ட மாவீரன் குமார கம்பண்ணாவின் ஆட்சி விவரம் சரியாக தெரியாமல் இருப்பது வருத்தம் தருவதாகும்.
இந்த விஜயநகர ஆட்சியை 2 பிரிவாக வரலாற்று ஆசிரியர்கள் பிரிக்கிறார்கள். 1370 முதல் 1529 வரையிலான மதுரை ஆட்சியாளர்கள், அதாவது விஜயநகர ஆரசு, நேரடியாக ஆட்சி நடத்திய காலம். அதன்பிறகு 1529 -1697 வரை முழு அதிகாரத்துடன் ஆட்சி செய்த நாயக்கர்கள் ஆட்சி.
தமிழகத்தில்
விஜயநகர நேரடி ஆட்சி(1370-1529):
வீர குமார கம்பண்ணா ஆரம்பித்த விஜயநகர ஆட்சி கன்னட வம்சத்தவர் ஆட்சியாகும். இதற்கு முன்பு கன்னட ஆட்சியாளர்கள் பல நேரங்களில் தமிழகத்தை வெற்றி பெற்றிருந்தாலும் முழுமையான ஆட்சியாக அது அமையவில்லை..
இந்த விஜயநகர பேரரசின் நேரடி ஆட்சியில், தமிழகம் பல பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது. குறிப்பாக பாளையங்கோட்டையின் பழைய கோட்டை இக்காலகட்டத்தில் பாலயன் என்ற கன்னட தளபதியால் கட்டப்பட்டதாக தெரிகிறது. அந்த காலத்தில் தாமிரபரணியின் குறுக்கே கட்டப்பட்ட கன்னடியன் அணைக்கட்டு மற்றும் கால்வாய்கள் இன்று வரை பேசபடுவதாக இருக்கிறது. கன்னடியன் கால்வாய் இன்றும் உபயோகத்தில் உள்ளது. அந்த காலத்தில் தாமிரபரணியில் ஆறு இடங்களில் அணைகள் கட்டப்பட்டதாகவும் R.கார்டுவெல் தன் குறிப்பில் தெரிவிக்கிறார்.
இந்த காலகட்டத்தில் மொத்த தமிழகமும் பல பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டாலும், பாண்டியர்களின் சந்ததியினர் தென்காசியை தலைநகராகக் கொண்டு ஒரு சிறுபகுதியை, விஜயநகர ஆட்சியின் கீழ் ஆண்டு வந்தததாகத் தெரிகிறது. வட தமிழகம் சந்திரகிரி மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. வேலூரில் கோட்டை கட்டப்பட்டதும் இந்த காலத்தில் தான். அத்துடன் காஞ்சிபுரம் தெலுங்கு வம்சமான சந்திரகிரி அரசின் கீழ் இருந்து வந்தது.
சோழர்களுக்கும் வேங்கி தெலுங்கு மன்னர்களுக்கும் ஏற்பட்ட திருமண உறவால் விழைந்த தெலுங்கு சோழர்கள் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல்லூரை தலைநகராக கொண்டு ஆண்டுவந்தனர். அப்போது காஞ்சிபுரம் அவர்கள் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. இக்காலகட்டத்தில் காஞ்சிபுரம் பலவிதமான தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிகிறது. அதன் பின்பு குமார கம்பண்ணா ஆரம்பித்த விஜயநகர ஆட்சி இங்கு தொடர்ந்து நடந்து வந்தது.
இடையில் 15 ஆம் நூற்றாண்டில் ஒரிசா மன்னர் கபிலேஸ்வர
கஜபதி காஞ்சியை வென்றதற்கான சான்றுகள் உள்ளது. இவர் தஞ்சை வரை சென்று வெற்றி கண்டார்.
இவருடைய ஆட்சி மிக குறுகிய காலமே இப்பகுதியில் நிலவியதாகத் தெரிகிறது.
வட தமிழகத்தில் காக்காட்டியர், ஆந்திர வேளமா அரசர்கள் மற்றும் ஒரிசா அரசர்கள்
போன்றோரின் படையெடுப்புகள் நிகழ்ந்தாலும், அவர்களின் ஆட்சி குறுகிய காலமே நடைபெற்றது, ஆனால்
விஜயநகர பேரரசின் ஆட்சி நிலையாக தொடர்ந்து 18 ஆம் நூற்றண்டு வரை நடைபெற்றதற்கு சான்றுகள்
உள்ளன. வரலாற்று பேராசிரியர் K.V.ராமன் எழுதிய “ஸ்ரீவரதராஜ சுவாமி கோயில்
வரலாறு, கலை மற்றும் கட்டடக்கலை’ என்ற ஆங்கில நூலில் இதை பற்றி அறிய
முடிகிறது.
ஒரு முக்கியமான விஷயம்
என்னவென்றால் காஞ்சிபுரத்தில், சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட, 'தேர் செல்லும்
வீதி' பற்றிய தகறாரை கிருஷ்ணதேவராய
மன்னர், காஞ்சியில் தங்கி இருந்த போது
தீர்த்துவைத்ததற்கான சான்றுகள் உள்ளன . விஜயநகர தளபதிகள் காஞ்சியில்
தொடர்ந்து தங்கி இருந்து நிர்வாகம் செய்ததற்கு
ஆதாரமாக கல்வெட்டுகள் நிறைய உள்ளன.
நாயக்கர்கள் ஆட்சி(1529-1697)
1526 ஆம் ஆண்டு தென்காசி
பாண்டியர்கள் மீண்டும் மதுரையின் ஆட்சியை பிடிக்க முயற்சித்ததாகத் தெரிகிறது.அப்போது
விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் தனது படைத்தளபதி நாகம்ம நாயக்கரின் தலைமையில் ஒரு படையை அனுப்பி பாண்டியர்களை ஒடுக்கினார். வெற்றி பெற்றத்தளபதி மதுரைக்கு தானே
உரிமை கொண்டாடியதால், நாகம்ம நாயக்கரின் மகன் விஜய நாத நாயக்கை
அனுப்பி, நாகம்ம நாயக்கை அடக்கினார். பின்பு விஜயநாத நாயக்கர் மதுரையின் ஆளுநராக மன்னரால்
நியமிக்கப்பட்டார். இவ்வாறு மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி ஆரம்பமானது. மதுரை நாயக்கர்கள்
தெலுங்கு வம்சத்தவர்கள் ஆவர்.
விஜயநாத நாயக்கருடன் இணைந்து பாண்டியர்களை
ஒடுக்கியதில் அரியநாதர் என்ற தமிழ் தளபதி பங்கெடுத்ததாக தெரிகிறது. அக்காலத்தில் அவர்
மிகவும் முக்கிய த்துவம் பெற்றவராக
விளங்கினார்.
நாயக்கர் ஆட்சியின் மிகச்சிறந்த மன்னராக திருமலை நாயக்கரை குறிப்பிடலாம்.அவர் காலத்தில்
உருவாக்கப்பட்ட மதுரை நாயக்கர் மகால் அரண்மனை மிக சிறப்பான பொலிவுடனும், மெருகுடனும் இன்றும் காணபடுகிறது. இவ்வாறு மதுரை நாயக்கர்கள்,
மதுரையை ஆண்டபோது, தஞ்சையிலும் ஒரு நாயக்க குடும்பம் ஆட்சி செய்து வந்தது. பிற்காலத்தில்
மதுரை நாயக்கர்கள் தங்கள் தலைநகரை திருச்சிக்கு
மாற்றியதாக அறிகிறோம்.
நாயக்கர் ஆட்சியின்போது, அவர்களுக்கு படைதளபதிகளாக
இருந்தவா்களில் சிலர் பாளையங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
இப்படி நியமிக்கப்பட்ட பாளையக்காரா்களில் முக்கியமானவர்கள்
ராமநாதபுர சேதுபதி, நெற்கட்டுசேவல் புலிப்பாண்டி தேவரின் முன்னோர்கள், சிவகிரி
பாளையக்காரர்கள் ஆவார்கள். இந்த பாளையக்காரர்கள் தமிழ் வம்சத்தை
சேர்ந்ததவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் நாயக்க மன்னருக்கு
முறையாக வரிசெலுத்தி வந்ததுடன், தேவையான நேரத்தில் படைகள் அனுப்பியும் உதவி வந்தனர்.
நாயக்கர் காலத்தில் போடப்பட்ட சாலைகள் மற்றும்
வழிப்போக்கர் தங்கும் விடுதி போன்ற வசதிகள்
இன்றும் பேசபடுவதாக இருக்கிறது. இவ்வாறு தெலுங்கு வம்சத்தை
சார்ந்த மதுரை நாயக்கர் ஆட்சி தமிழகத்தில் பலம் பொருந்தியதாக விளங்கியது. இவர்கள்
மற்ற நாயக்க அரசுடனும்
பக்கத்து அரசான திருவிதாங்கூர் அரசுடனும் போரிட்டுவந்தனர்.
பிற்காலத்தில், திருவிதாங்கூர் அரசினர் பாண்டிய நாட்டின் தெற்கு
பகுதிகளை கைபற்றி, அவற்றை தங்கள் ஆட்சியின்கீழ் கொண்டுவந்தனர். ஒருபோதும் திருவிதாங்கூர்
அரசால் மதுரையை பிடிக்கும் அளவு வெற்றிபெறமுடியவில்லை என்பது உண்மை. ஆனால் அவர்கள் நாயக்கர்
ஆட்சியை தங்கள் நாட்டில் ஏற்படாமல்தடுத்து காத்து நின்றது தெரிகிறது.
1565ஆம் ஆண்டில் நடைபெற்ற தலைக்கோட்டை யுத்தத்தில் விஜயநகர பேரரசின் மத்திய தலைமை தோல்வி கண்ட போது அதன் தலைநகரம் முழுமையாக அழிக்கப்பட்டது. ஆனால் அரச வம்சத்தின் ஒரு பகுதியினர் பெனகோட்டா என்ற இடத்துக்கு சென்று தலைமை இடத்தை மாற்றி வாழ்ந்தனர். அவர்களுடைய பலம் குறைந்ததால், மதுரை நாயக்கர்கள் தங்களை சுயமாக ஆளும் அரசாக செயல்படுத்தினாலும், தலைமையை மதித்தே வந்ததாகத் தெரிகிறது. அவர்கள் விசுவாசம் குறையாமல் இருந்ததாகவே தெரிகிறது. .மதுரை நாயக்கர் அரசுகளில் திருமலை நாயக்கரின் திறமையான ஆட்சியும்,வெற்றிகளும் நினைவு கூறத்தக்கது.
விஜயநகர அரசை மீண்டும் பெரிய அளவில் உருவாக்க
நடந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தலைநகர் சந்திரகிரியின் கீழ்
முழு தமிழகமும் கொண்டு வரப்பட்டதாகத் தெரிகிறது.
ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால் மதுரை நாயக்க மன்னர்கள் விஜயநகர அரசின் தளபதிகள் ஆவர். ஆனால் தஞ்சை நாயக்க மன்னர்கள் விஜயநகர அரச
குடும்பத்தைச் சார்ந்தவர்கள். 16 ஆம் நூற்றாண்டின்
இறுதியில் கோல்கொண்டா சுல்தான்கள் மீண்டும் விஜயநகர அரசின் வடபகுதிகளைக் கைப்பற்றினார்கள்.
இந்த காலகட்டத்தில் மைசூர் கன்னட அரசு, விஜயநகர
அரசின் கட்டுபாட்டிலிருந்து முழுமையாக விடுபட்டு வலிமை பெற தொடங்கியது. சந்திரகிரி அரசின் தளபதிகள்
வேலூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி போன்ற இடங்களில் தங்கி இருந்து நிர்வாகம் செய்ததற்கான
சான்றுகள் உள்ளன.
1639 ஆம் ஆண்டு சந்திரகிரி ஆளுநரின் தளபதியான சென்னா என்பவரின் 2 மகன்கள், ஆங்கிலேயர்களுக்கு
இன்றைய சென்னை செயின்ஜார்ஜ் கோட்டை பகுதியை வியாபாரத்திற்காக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சந்திரகிரி அரசு மீது கோல்கொண்டா
சுல்தான்படைகள் தாக்கியபோது, செஞ்சி, தஞ்சாவூர்
மற்றும் மதுரை நாயக்கர்கள் உதவி செய்யவில்லை என்பதுதான் வருத்தமான உண்மை.
ஆங்கிலேயர்கள்,சென்னையில்
கோட்டை கட்டி வியாபாரம் செய்தாலும், இங்கு நடக்கும் அரசியல் நிகழ்வுகளை தங்கள்
நாட்டிற்கு தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளனர். ஆதலால் இக்காலகட்டம் முதல் தமிழ் நாட்டில் நடந்த அனைத்து
நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆங்கிலேயர்கள் 1643 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில், முஸ்லீம்
படை தமிழகம் நோக்கி வருவதை தெரிவிக்கிறார்கள்.முஸ்லீம்கள் தமிழகம் முழுவதையும் வென்று
விடுவார்கள் என்பதையும் அனுமானித்து எழுதுகிறார்கள்.
சந்திரகிரியின் ஆளுநரான ஸ்ரீரங்கா விஜயநகர
அரசின் மன்னராக பொறுப்பேற்றபோது, எதிர்ப்புகள் இருந்ததாகத் தெரிகிறது. அந்த காலகட்டத்தில்
வேலூர், சந்திரகிரி ஆளுநரின் வசிப்பிடமாகவும் இருந்து வந்ததாக தெரிகிறது.
1645 ஆம் ஆண்டு கோல்கொண்டா பீஜபூர் அரசுகளின் ஒன்று
சேர்ந்த படை சந்திரகிரி பகுதிகளை தாக்கியதுடன்,வேலூர் கோட்டையையும் கைப்பற்றியது. கோல்கொண்டாவின்
தளபதி மீர்ஜம்லாவின் படை செஞ்சி கோட்டையை கைப்பற்றியது.
இவ்வாறு முஸ்லீம்கள்
ஆட்சி தமிழகத்தில் பரவ தொடங்கியது. மதுரை நாயக்கர் படை, தஞ்ஞாவூர் நாயக்க அரசரை 1643ல்
தோற்கடித்து தஞ்ஞாவூரை கைப்பற்றியது. பீஜபூர் முகமதிய அரசர், மராட்டிய தளபதியான வெங்கோஜி தலைமையில் ஒரு படையை அனுப்பி தஞ்சை நாயக்க அரசை
கைப்பற்றினார்.
1676 ஆம் ஆண்டு நடந்த மராட்டிய சிவாஜியின் தமிழகப்படையெடுப்பு
குறிப்பிடத்தக்கது. சிவாஜியின் படைகள் வேலூர்
கோட்டை, செஞ்சிக் கோட்டை போன்றவற்றை கைப்பற்றியதுடன், தஞ்சை நாயக்க அரசை கைப்பற்றிய
தனது தமையன் ஈகோஜி என்ற வேங்கோஜியை தஞ்சையின் மன்னராக்கிவிட்டு, மராட்டியம்
திரும்பினார். இவ்வாறு தஞ்சையில் உருவாக்கப்பட்ட மராட்டிய ஆட்சி தொடர்ந்து நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
1688 ஆம் ஆண்டு முகலாய அரசர் அவ்ரங்கசீபின் படை
தமிழகத்தை வென்ற நிகழ்வு மிகவும் குறிப்பிடத்தக்கது. கோல்கொண்டா பீஜபூர் அரசுகளை தோற்கடித்த
மொகலாய படை, மராட்டிய படையை காஞ்சிபுரத்தில் அந்த ஆண்டு நடந்த போரில் வென்றது. பின்பு செஞ்சி கோட்டையை
கைப்பற்றியதுடன் தென்தமிழகம் முழுவதையும் தன் கீழ் கொண்டுவந்தது.
மதுரையை ராணி மங்கம்மா ஆண்ட
காலத்தில் அதாவது 1697 ஆம் ஆண்டு, மொகலாயருடன் ஏற்பட்ட ஒப்பந்தம் மூலம், மொகலாயர்களுக்கு கப்பம்
செலுத்தும் கட்டாயம் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் இராமநாதபுர பாளையக்காரா் கிழவன்
சேதுபதி, மதுரையை கைபற்ற நடத்திய முயற்சி முழுமையாக வெற்றி பெறவில்லை என்பது தெரிகிறது. பின்பு நாயக்கர்
அரசின் தலைமை இடம் திருச்சிக்கு மாற்றப்பட்டு, செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
17ஆம் நூற்றண்டு தமிழக சமூகம் பற்றி, ஆங்கில அதிகாரி சார்லஸ்
ஸ்டீவார்ட் குரோல், 1688ம் ஆண்டு எழுதியது, நம்மை மிகவும் வருத்தமடைய செய்யும் விதமாக இருக்கிறது . அவர் பின்வருமாறு எழுதுகிறார் “மக்களின் நலனுக்காக செயல்பட ஒருவர் கூட இல்லை!. மக்கள்
அமைதியாக துன்பத்தை சகித்தார்கள். தாங்கள் பட்ட கடும் துன்பம் பற்றி, அவர்கள்
ஒரு பதிவு கூட
செய்யவில்லை” என்பதாகும்.
17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் ஆட்சி:
பாண்டியர்கள் தமிழகத்தை ஆண்ட 13ஆம் நூற்றாண்டில், முஸ்லீம்கள்
தமிழகத்தின் நிர்வாகத்தில் பங்கெடுத்ததற்கான
சான்றுகள் உள்ளது. பாண்டியர்கள் தோல்வி அடைந்தபின்பு மதுரை சுல்தான்கள் ஆட்சியில்a அவர்கள் தாங்களே ஆட்சி செய்யும் நிலைக்கு வந்தனர். மதுரை சுல்தான்கள் ஆட்சி காலம் முடிந்து, விஜயநகர ஆட்சி அமைந்த போது, முஸ்லீம்கள் தமிழகத்தின் கடலோர பகுதியில் பலம்
பெற்று விளங்கியதற்கான சான்றுகள் உள்ளன.
1532 ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கும் கடலோரத் தமிழர்களுக்கும்
நடந்த போராட்டங்களில், தங்களுக்கு பலம் போதாததை உணர்ந்த, 70 தமிழர்கள் அன்றைய தினம் கொச்சியில் ஆட்சி செய்த போர்ச்சிக்கீசியரிடம்
உதவி நாடி போனார்கள். கொச்சியில் அவர்கள் அனைவரும் முதலில் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டனர். போர்ச்சுகீசியர்படை முஸ்லீம்களை தோற்கடித்தபின், மேலும் 20000 பேர் கிறிஸ்தவர்களாக
மதமாற்றம் செய்யப்பட்டனர். இவ்வாறு 1532 ஆம் ஆண்டில் ஐரோப்பியா்கள் தமிழகத்தின் கடலோரப்பகுதியை
தங்கள் ஆளுகைக்குக் கொண்டுவந்தனர். தென்தமிழகத்தில் தூத்துக்குடி அருகே உள்ள புன்னைக்காயலை
தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஐரோப்பியா்கள். பின்பு தூத்துக்குடியில் தங்கள் தலைமை
இடத்தை மாற்றினர்கள். ஐரோப்பியா்களின் தலைவராக சேவியர் செயல்பட்ட காலம் அது. அக்காலத்தில் ஐரோப்பியா்களுக்கும், நாயக்கர்
ஆட்சியாளர்களுக்கும் இடையே சண்டைகள் ஏற்பட்ட சம்பவங்களும் நிறைய உள்ளன.
1658 ஆம் ஆண்டு, போர்ச்சுகீயரிடம்
இருந்து, கடலோர பகுதிகள் டச்சுக்காரர்கள் வசம் கைமாறியது. டச்சுக்காரர்கள் தூத்துக்குடியில்
கோட்டை கட்டி ஆளத் தொடங்கினர். டச்சுக்காரர்களுக்கும் பாளையக்காரா்களுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு தொடர்ந்து இருந்து வந்தது
தெரிகிறது.
டச்சுகாரர்கள் தரங்கம்பாடியில்
கோட்டை கட்டி சிறப்பாக வியாபாரம் செய்த வரலாறும் உண்டு. அந்த காலத்தில் தமிழகத்தில்
இருந்து, அவர்கள் எடுத்து சென்ற பொருட்களில்
ஓன்று, 'இராசேந்திர சோழன் பிரகடனங்கள்' எழுதப்பட்ட 21 செப்பு தகடுகள் ஆகும். அவைகள் அனைத்தும்
ஒரே சங்கலியால் சேர்க்கப்பட்டு சோழர் சின்னம் பொறிக்கப்பட்ட தகடுடன் இணைக்கபட்டுள்ளது.
இந்த 21 செப்பேடுகளில், 16 இல் தமிழிலும், 5 இல் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளன. இந்த செப்பேடுகள், நெதர்லாந்து நாட்டிலுள்ள
லீஇடன் பல்கலை கழக நூலகத்தில் இன்றும் பத்திரமாக
பாதுகாக்கப்பட்டு வரப்படுகின்றன. லீஇடென் பல்கலைகழக இணைய தளத்தில் நுழைத்தால் இவைகளை
இங்கிருந்தே பார்க்கலாம். ஆனால் படிப்பதற்கு நாம் பணம் செலுத்த வேண்டும்.
தமிழர் அரசுகளின் சொத்துகள் எப்படியெல்லாம்
சிதறடிக்கப்பட்டு, தொலைந்து போனது என்பதற்க்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
பிரஞ்சிகாரர்கள் பாண்டிச்சேரியில் கோட்டை கட்டி
ஆண்ட வரலாறு ஒரு தனி வரலாறு ஆகும்.
மொகலாயர் ஆட்சி (1697-1801):
அவ்ரங்கசீபின் படை தமிழகத்தை வென்ற பின்பு மொகலாய
தளபதி தாவூத்கான் தமிழகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அவர் ஆற்காட்டை தலைமையிடமாக
கொண்டு செயல்பட தொடங்கினார். இவ்வாறு மொகலாயர் ஆட்சி தமிழகத்தில் பலமாக பரவியது.
தாவூத்கானுக்கு பின் அவருடைய மற்றொரு சக
அதிகாரி சையத் முசாபர் ஆற்காடு நவாப்பாக 1710 ஆம் ஆண்டு பதவி ஏற்று தமிழக நிர்வாகத்தை ஏற்றார். இவ்வாறு ஆங்கிலேயரின் கண்பார்வையிலேயே, தமிழகம் மொகலாய அதிகாரிகளால் ஆளப்படும் ஒரு
பகுதியாக மாறியது என்பது தான் உண்மை.
1736 ஆம் ஆண்டு நாயக்க அரச குடும்பத்தில் பிரச்சனை
ஏற்பட்டது.அப்போது ஆற்காட்டு நவாப், தென்தமிழகத்தை தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு
வர முற்பட்ட போது, ஒரு மராட்டிய படையினர் மகராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு வந்து, ஆற்காட்டு
நவாப்பை தோற்கடித்து, திருச்சியையும் மதுரையையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர்.
இவர்கள் ஆட்சி சிறிது காலமே நடைபெற்றது. மீண்டும் மொகலாயர்கள் மராட்டியா்களை தோற்கடித்து தமிழகத்தை தங்கள் கீழ் கொண்டுவந்தனர். இவ்வாறு ஆற்காடு நவாப்பின் ஆட்சி மீண்டும் தொடர்ந்தது. 1744 ஆம் ஆண்டு ஹைதராபாத் நிஜாமால், அன்வர்
உதின்கான் ஆற்காட்டு நவாப்பாக நியமிக்கப்பட்டார். அன்வர் உதின்கான், அன்வர் கானை, திருநெல்வேலியில் வரி வசூல் செய்யும் பணிக்காக நியமித்தார்.
கோல்கொண்டா
மற்றும் பீஜபூர் படைகள் மொகலாயர் படையால் தோற்கடிக்கப்பட்ட பின்பு, நிறைய முஸ்லீம் போர் வீரர்கள்
ஆற்காட்டு நவாப்பிடம் பணியாற்றினர். சிலர் தஞ்சை சரபோஜியிடமும், சிலர் மைசூர் அரசிலும்
பணி ஆற்றினர். அப்படி படை வீரராக இருந்து பின்பு
பெரிய ஆட்சியாளராக மாறியவர்தான்
ஹைதர் அலி. அவர் புதல்வர்தான் திப்பு சுல்தான் என்னும் மாவீரன்.
1751 ஆம் ஆண்டு ஆற்காட்டு நவாப் படை தென்தமிழகம்
நோக்கி சென்றது. அந்த படையில் 2500 குதிரை வீரர்களும்,
3000 உதவி ஆட்களும், கிழக்கிந்திய கம்பெனியை சார்ந்த 30 ஐரோப்பியர்களும் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் பாளையங்கோட்டையை தலைமை இடமாக கொண்டு
வரி வசூல் செய்யும் தொழிலை செய்ய ஆரம்பித்தனர். இவ்வாறு ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டு அரசு
விஷயங்களில் தலையிட தொடங்கினர். இந்த காலகட்டத்தில்
நவாப் படைக்கு தலைமை தாங்கியவர், ஒரு தமிழர், முகமதியராக மாறிய மொகமது யூசூப்கான் .
1755 ஆம் ஆண்டு, மதுரை ஆளுநர் ஆலம்கான், நவாப்புக்கு எதிராக செயல்படுவதாக, அவரை அடக்க அனுப்பப்பட்ட
படையில் 500 ஐரோப்பியர்கள்
ஈடுபட்டனர். இந்த படைக்கு ஆங்கில அதிகாரி ஹெரோன்
தலைமை ஏற்றார். இவ்வாறு ஆங்கிலேயர்கள்,
நவாப்பின் அடியாட்களாகப் பணிபுரிய துவங்கினர். இந்த
காலகட்டத்தில் முஸ்லீம் தளபதி களக்காட்டுப் பகுதியை திருவிதாங்கூர் அரசுக்கு விற்றதாக அறிகிறோம்.
ஒரு காலகட்டத்தில் சில முஸ்லீம் படைத்தளபதிகள் நெல்கட்டு சேவல் பாளையக்காரர் புலிதேவருடன் சேர்ந்து, திருவிதாங்கூர் படை உதவியுடன், ஆங்கிலேயர் உதவிபெற்ற ஆற்காட்டு
நவாப் படையை தோற்கடித்தனர். புலித்தேவர், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களின் உதவியுடன்
கூட்டாக சேர்ந்து, ஆற்காட்டு நவாப்பை எதிர்க்க திட்டமிட்டதை,
கட்டபொம்மன் ஏற்க மறுத்துவிட்டார். இவ்வாறு பாளயக்காரர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இருந்து
வந்தது தெரிகிறது.
ஆப்கானிஸ்தானை சொந்தமாக கொண்ட படைதளபதிகளான
3 பதான் சகோதரர்கள் மொகமது பர்க்கி, மொகமது மைனா, நபிகான் கட்டாக் பாளையக்காரர்களுடன் நடந்த சண்டையில் பங்கேற்ற விசயம் தெரிகிறது. இவர்கள்
ஆங்கிலேயரை ஏற்க மறுத்து செயல்பட்டதாக தெரிய வருகிறது.
புலித்தேவன் பதான் படைத்தளபதிகள்
மற்றும் சில பாளையக்காரர்களுடன் சேர்ந்து ஆற்காட்டு நவாப்பை எதிர்த்தபோது, கட்டபொம்மனின்
தாத்தா ஆர்க்காட்டு நவாப்புடனும் ஆங்கிலேயருடனும் சேர்ந்து போரிட்டது
தெரியவருகிறது.
1758 இல் பிரஞ்ச் படைகள் சென்னையைத்
தாக்கியபோது ஆங்கிலேயர்கள் புலித்தேவனுடன் போரிட்டு வந்த மொகமது யூசூப்கானை சென்னைக்கு
அழைத்த விவரம் அறிகிறோம்.
புலிதேவனுக்கு எதிராக நடந்த சண்டையில்
புதுகோட்டை தொண்டைமான்கள் ஆற் காட்டு நவாப்புடனும் ஆங்கிலேயருடனும் சேர்ந்து போரிட்டது
தெரிகிறது.
மிகபெரிய படைத்தளபதியாக விளங்கிய
மொகமது யூசூப்கான், பிரஞ்ச் படைவீரர்கள் உதவியுடன் பாளையங்கோட்டையை தலைமையாக
கொண்டு தானே தனியாக ஆளமுயற்சித்தபோது, ஆங்கிலப்படை அவரை எதிர்த்தது. பிரஞ்சு படை வீரனால்
அவர் காட்டிக் கொடுக்கப்பட்டார். அன்றைய ஆங்கிலேய தளபதிகள், ஆற்காட்டு நவாப்புக்கு தெரிவிக்காமலேயே மொகமது யூசூப்கானை எந்த கருணையும் காட்டாமல், ஒரு நாயை கொல்வது போல 1764 இல் தூக்கிலிட்டு கொலை செய்தனர்.
1763 இல் திருநெல்வேலிக்கு தெற்கே
40 மைல் தூரத்தில் அமைந்திருந்த நெல்லிகொட்டை தாக்குதல் குறிப்பிடத்தக்கது.ஆங்கிலேயர்
தலைமையில் நடந்த இந்த தாக்குதலில், கோட்டையில் தங்கி இருந்த 400 பேரில், 6 பேர் மட்டுமே
உயிர் பிழைத்தனர். பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்ட வருத்தமான சம்பவம் அது.
இந்த கால கட்டத்தில் இராமநாதபுர
சேதுபதி, நவாப்பு ஆளுகைக்கு உட்பட சம்மதம்
தெரிவித்து, சில கடற்கரை பகுதிகளை ஆங்கிலேயருக்கு கொடுக்க முன்வந்தார்.
நெல்லிக்கொட்டை தாக்குதலுக்கும்,
புலித்தேவனுடைய கோட்டையை தாக்க முயன்று வெற்றி பெறாமல் போனதுக்கும் காரணமான ஆங்கிலபடைகளின்
அப்போதைய தலைமை தளபதி ஹெரோன், பணி நீக்கம் செய்யப்பட்டது தெரியவருகிறது.
ஆங்கில தளபதி புல்லர்ட்டன்
1783 ஆம் ஆண்டு திருநெல்வேலி பகுதி பற்றி எழுதும் போது, அதன் செழிப்பை சொல்வதுடன் அன்றைய
தமிழகத்தின் நிலை பற்றி கீழ்வருமாறு எழுதுகிறார்.
'ஒட்டுடன் சத்திரம் வரை உள்ள வட மேற்கு பகுதிகள் திப்பு சுல்தான் கீழ் இருந்தது' என்றும் திருநெல்வேலிக்கு தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் திருவாங்கூர் அரசின் கீழ்
இருந்ததாகவும் தெரிவிக்கிறார். மேலும் இப்பகுதியில் பெறப்படும் வரிவசூலை அதிகரிக்க முடியும்
என்றும் உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறுகிறார்.
1779 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடந்த முகரம் பேரணியின் போது, ஏற்பட்ட
தகறாறில் பல பிராமணர்கள் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில், திப்பு
சுல்தானின் மைசூர் அரசு படை ஆற்காட்டு நவாப்புடனும் ஆங்கிலேயருடனும் சண்டையிட்டு வந்தது
தெரிகிறது. ஆங்கில படை ஆற்காட்டு நவாப்புடன் சேர்ந்து திப்புவை எதிர்த்த வரலாறு நிகழ்ந்த
காலம் அது.
பின்னாளில் மைசூர் புலி என்றழைக்கப்பட்ட
வீரன் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்டனர்.
ஆங்கிலேயர்கள் அவர்களை கொன்ற வரலாற்று நிகழ்வுகளும் நடந்த காலம் அது .
வீர பாண்டிய கட்டபொம்மனின் வீர
வரலாறு தமிழ் நிலத்தில் நடந்த மிகப் பெரிய விசயமாகும்.
அவர் பல நேரங்களில் ஆற்காட்டு நவாப்புக்கு
கப்பம் செலுத்தி வந்தபோதும், சில நேரங்களில் அதை முழுமையாக செலுத்த முடியாததால், ஆங்கில அதிகாரிகள் அவரை
மரியாதை இன்றி நடத்திய போது நிகழ்ந்த சம்பவங்களால், அவர்களை எதிர்க்கத் துணிந்தார்.
அவர் மட்டுமல்ல அவருடைய தந்தையும்
ஆங்கிலேயருடன் சண்டையிட்டு தூக்கிலிடப்பட்டு இறந்தார் என்பதும், அவருடைய தாத்தாவும்
சண்டையில் தான் இறந்தார் என்பதும் உண்மை.
ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சியை தாக்கிய சம்பவங்கள் மட்டும் 6 முறை நடந்தது.
முதல் முறை 1755 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் தோல்வி
உற்றனர். 5 ஆவது முறையும் தோல்வி அடைந்தனர் ஆனால் 2,3,4,மற்றும் 6ம் முறைகளில் வெற்றிபெற்றனர் என்பது
உண்மை.
வீரத்தின் சின்னமாக செயல்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன்
கம்பளத்து தெலுங்கு நாயக்கர் வகுப்பை சேர்ந்தவர்.
1799 ஆம் ஆண்டு அவரை கைது செய்தபின் அனைத்து பாளையக்காரர்களையும்
ஆங்கில அதிகாரி பானர்மேன் வரவழைத்து, அவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் அவையில் கட்டபொம்மனை
நிற்கவைத்து அவமானப்படுத்தி, மற்றவர்களையும் பயத்துக்கு உள்ளாக்கி, தீர்ப்பு வழங்கினார்.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் தலைமைக்குத் தெரிவிக்காமலேயே,
சரியான காரணம் இன்றியே தூக்கிலிட உத்தரவும் பிறப்பித்தார் . அது
மட்டுமின்றி பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் அமைச்சர் சுப்பிரமணிய பிள்ளையின் தலையை
துண்டித்து, பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு கம்பத்தில்
நட்டு வைத்தனர். ஆங்கிலேய அதிகாரிகள் பாஞ்சலங்குறிச்சி கோட்டையை
தரையோடு தரையாக இடித்தும் தள்ளினார்கள். மேலும்
பொதுமக்கள் யாரும் இரவு 9 மணிக்கு மேல் வீட்டை
விட்டு வெளியே
வரக்கூடாது என்ற கட்டுப்பாட்டையும் போட்டனர். யாரும் ஆயுதங்கள் வைத்திருக்கவும் தடைபோடப்பட்டது.
வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு உதவிய பாளையக்காரர்கள்
தங்கள் பாளையங்களை இழந்தார்கள். இவ்வாறு பாஞ்சாலங்குறிச்சி, நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை, கொள்ளர்பட்டி, கள்குடி
மற்றும் குளத்தூர் பாளையங்களை ஆங்கிலேயர் எடுத்துக்கொண்டதுடன், இந்த பாளையங்களின் கோட்டைகளை
இடித்துத்தள்ளவும் உத்தரவிட்டனர். இந்த பாளையக்காரர்களும் வீரபாண்டிய கட்டபொம்மன்
சகோதரர்களும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து தப்பிய, வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை மற்றும் அவருடைய நண்பர்கள், வெறும்கால்களுடன் பாளையங்கோட்டையில் இருந்து இரவு முழுவதும் ஓடியே பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை புதுபித்து நடத்திய வீரபோராட்டமும் நினைவில் வைக்கதக்கது.
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவிய காரணத்தால் சிவகங்கை
பாளையக்காரா்களான மருது சகோதரா்கள் அதாவது பெரிய மருது மற்றும் சின்ன
மருது ஆகியோர், ஆங்கிலேயரின் வெறுப்பை சம்பாதித்தனர். ஆதலால்
அவர்களும் ஆங்கிலேயருடன் யுத்தம் செய்ய நேரிட்டது. அவர்கள் ஆற்காடு நவாப்புக்கு வரி
செலுத்திய போதிலும் "சரியாக வரி செலுத்தவில்லை" என்று காரணம் காட்டி, அவர்களிடம் ஆங்கிலேயர்கள்
போரிட்டனர். ஆங்கிலேயர்கள் மருது சகோதரா்களை கைது செய்து, தூக்கிலிட்ட நிகழ்ச்சியும் இந்த காலக்கட்டத்தில் தான் நடந்தது.
மருது சகோதரா்களை தங்கள் குழந்தைகளாக சுவிகாரம்
எடுத்த அவர்கள் தாயார் வேலுநாச்சியாரின் வரலாறும்
ஒரு வீர வரலாறு ஆகும்.
வேலு நாச்சியாரின் கணவர் சிவகங்கை பாளையக்காரர் முத்துவடுக
நாதர் ஹைதர் அலியின் நட்புடன் ஆற்காட்டு நவாப்பை எதிர்த்ததால் 1772 இல் ஆங்கிலேயரால்
கொல்லப்பட்டார். சிலகாலத்திற்கு பின்பு வேலு
நாச்சியார் ஹைதர் அலியின் உதவியுடன் போரிட்டு
சிவகங்கை பாளையத்தை 1780 ஆம் ஆண்டு மீட்டதும் வரலாற்று நிகழ்வுகளாகும்.
வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரா்கள் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் போன்றோர் மறைவுக்கு பிறகு ஆங்கிலேயர்கள் தங்கள் கீழ் உள்ள
பரப்பளவை விரிவுபடுத்தியதுடன், இறுதியாக தமிழகம் முழுவதையும் தங்கள்ஆட்சியின் கீழ் கொண்டு
வந்தனர்.
தமிழ் நிலத்தின் மேற்கு பகுதியான கோயம்புத்தூர்
பகுதி தமிழகத்தின் மற்றப் பகுதிகளை போலவே 1311 இல் பாண்டியர்களின் கீழ் இருந்தது, பின்பு இப்பகுதியை மதுரை சுல்தான்கள் ஆண்டனர், பின்பு இப்பகுதி கொய்சால
அரசு, விஜயநகர அரசு, மதுரை நாயக்கர்
மற்றும் தஞ்சாவூர் நாயக்கரின் கீழ் இருந்து வந்தது.. இங்கும் பாளையங்கள் உருவாக்கப்பட்டது. பின்பு
மைசூர் அரசர்கள் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆட்சி செய்தனர். இவர்களின் கீழ்
திண்டுக்கல் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலேயருக்கும்
திப்பு சுல்தானுக்கும் இடையே ஏற்பட்ட போரில், சில நேரங்களில் இப்பகுதிகள் கைமாறி கொண்டே
இருந்தது தெரிகிறது
.
கடைசியாக ஆங்கிலேயர்கள் திப்புசுல்தானை தோற்கடித்தப்பின்பு,
முழுமையாக இப்பகுதிகள்
ஆற்காட்டு நவாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு, பின்பு ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
தீரன் சின்னமலை
கொங்கு நாட்டு பகுதியின் பாளையக்காரர் ஆவர். ஆற்காட்டு நவாப்புடன் திப்புசுல்தான் நடத்திய போரில் பங்கெடுத்த பாளையக்காரர்.
இவர். திப்பு சுல்தானுடன் சேர்ந்து, ஆற்காட்டு நவாப்பையும் ஆங்கிலேயரையும் பல போரில் எதிர்த்து வெற்றி பெற்றவர்.
இறுதியில் 1802 இல் ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டவர் ஆவர்.
நெல்கட்டுசேவலை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட புலித்தேவேரின் போர்
செய்யும் திறமையும், நுட்பமான அணுகுமுறையும் இன்று நினைத்தாலும் வியப்புக்குரியதாக இருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும், விசுவாசமும்,
தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு வீழ்ந்த விதமும் மிக்க வியப்பளிப்பதாக இருக்கிறது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் அமைச்சர் சுப்ரமணிய பிள்ளை மற்றும் கட்டபொம்மனுக்கு
உதவியதால் ஆங்கிலேயரின் வெறுப்புக்கு உள்ளாகிய மருது சகோதரர்கள் சண்டையிட நேரிட்டு, உயிர்விட்ட
விதமும் நினைவில் கொள்ளத்தக்கது. வேலு நாச்சியார்
ஆங்கிலேயரை எதிர்த்த வரலாறு என்றும்
நினைவில் நிற்பதாகும்.
ஆங்கிலேயர்கள் ஆட்சி (1801-1947)
ஆங்கிலேயர்கள்,
ஆற்காட்டு நவாப்புக்கும் ஹைதர் அளிக்கும் ஏற்பட்ட போரில், ஆங்கில படை பங்கேற்று உதவியதற்க்கான
செலவுத்தொகையை, மக்களிடம் தாங்களே நேரடியாக
வசூலிக்க தொடங்கினார்கள். இவ்வாறு ஆற்காடு நவாப்புக்கு வரி வசூலிக்கும் அடியாட்களாக
தமிழகத்தின் அரசியல் களத்தில் ஈடுபட்ட ஆங்கிலேயர்கள், ஆற்காட்டு நவாப்பிடம் வரிவசூல் செய்யும் மொத்த உரிமையையும் குத்தகைக்கு எடுத்தனர்.
பின்பு "எப்படி வரியை அதிகமாக வசூலிக்க முடியும்?" என்று கணக்கிட்டு, அதற்கான வளர்ச்சிப்பணிகளை ஏற்படுத்தியதாகத் தோன்றுகிறது. அதன் பின்பு
ஆங்கிலேயர்கள், ஆண்டுதோறும் ஒரு தொகையை ஆற்காடு நவாப்பிற்கு வழங்கியதுடன், முழு ஆட்சி
பொறுப்பையும் 1801 ஆம் ஆண்டு முதல் ஏற்றுக்கொண்டனர்.
இக்காலகட்டத்தில்
ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டை மட்டுமின்றி இறுதியாக, இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சியின்
கீழ் கொண்டு வந்தனர்.
1806ம்
ஆண்டு வேலூர் ஜெயிலில் இருந்த திப்பு சுல்தானின் படை வீரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து
போரிட்ட நிகழ்ச்சியும் நினைவு கூறத்தக்கது.
1855 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த, வாரிசு இல்லாத சமஸ்தானங்களை,
ஆங்கில அரசுடன் இணைக்கும் சட்டத்தின் கீழ், விட்டுவைத்திருந்த மீதி உரிமைகளையும் ஆற்காடு நவாப்பிடம்
இருந்து அபகரித்துக் கொண்டனர். இவ்வாறு தமிழகம் கிழக்கிந்திய கம்பனியால் பிரிட்டீசார்
ஆட்சியின் கீழ் முழுமையாக வந்தது.
1857 ஆம்ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்திற்கு பிறகு,
இந்தியா முழுவதும் 1858 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
பள்ளிக்கூடங்களை
தொடங்கியதும், தொழிற்சாலைகளை தொடங்கியதும், அணைகள்
கட்டியதும், மத விசயங்களில் தலையிடாமல் இருந்ததுமாக, அதுவரை இல்லாத நல்ல நிர்வாகத்தை ஆங்கிலேயர் அமைத்தனர் என்பதை ஏற்றுகொள்ள
வேண்டும்.
19 ஆம் நூற்றாண்டில் காலரா நோய் பெரிய அளவில் தமிழ்நாட்டு
மக்களை பாதித்ததாக அறிகிறோம். அதற்கான மருத்துவ வசதிகளை ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தியதையும் அறிய முடிகிறது.
"ஆயுதங்கள் எடுத்துச் செல்லக்கூடாது, இரவு
9 மணிக்கு ஊர் உறங்கிவிடவேண்டும்" என்ற சட்டங்களை ஏற்படுத்தி, தங்கள் ஆயுதபலத்தை காட்டி
ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து கலை செல்வங்களையும் மிக அளவில் செல்வத்தை தமது நாட்டுக்கு ஆங்கிலேயர்கள் எடுத்து சென்றனர்.
உள்ளூர் மக்கள் தொழில் தொடங்க முடியாத நிலை இருந்தது. "கப்பல் வணிகத்தில் உள்ளூர்
வாசிகள் ஈடுபட முடியாது" போன்ற நிறைய கட்டுபாடுகளை போட்டு
ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர்.
ஆங்கிலேயர்
ஆட்சியில் கல்வி கற்று, விவரம் பெற்றவர்கள், 'இந்தியா முழுவதும்,' அன்னியர்கள் ஆட்சியின்
கீழ் இருப்பதை அறிந்து, உரிமை பெறுவதற்கு போராடிய காலம் இந்திய வரலாற்றில் இனிய காலமாக
தெரிகிறது. தமிழர்கள் சுமார் 600 ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடப்பதை அறியாத மக்கள் இந்த
போராட்டத்தில் ஈடுபட்ட நிகழ்ச்சிகள், மனமெல்லாம் மகிழ்ச்சி
தரும் விதமாக அமைகிறது.
இந்திய சுதந்திர
போராட்டத்தின் அகில இந்திய தலைவராக 1920 ஆம் ஆண்டு செயல்பட்ட தமிழகத்தை சார்ந்த விஜய இராகவாச்சாரியாரின் பணி குறிப்பிடத்தக்கது.
தமிழக சுதந்திர போராட்டத்தில் எண்ணற்ற வீரர்கள்
சிறை சென்றும், சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தும், உயிர்நீத்தும் நடத்திய போராட்ட வரலாறு நெஞ்சம் நெகிழும் வரலாற்று நிகழ்ச்சி
ஆகும்.
வ.உ.சிதம்பரம்
பிள்ளை ஆங்கிலேயரை எதிர்த்தும், கப்பல் வாணிபம் செய்ததும், சுதந்திர வேள்வியில் ஈடுபட்டதும், அதற்காக
செக்கிழுத்து வேதனை அனுபவித்ததும் தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னால் எழுதப்பட்ட வீர வரலாறு.
பாரதியார் தன் பாடல்கள் மூலமாக,தமிழ் மக்களை தட்டி
எழுப்பிய விதமும்,பாண்டிச்சேரி சென்று சுதந்திர
போராட்டத்தில் ஈடுபட்டதும், தமிழ் மக்கள் இன்றும், அவர்
பாடல்களை பாடி எழுச்சியுடன் இருப்பதும் அவருக்கு
நன்றியுள்ளவர்களாக இருப்பதுவும் பாரதியின் பெருமைக்கு ஓர் சான்று.
சுதந்திர வேள்வியில் தன்னை முழுமையாக
ஈடுபடுத்தி கொண்ட சுப்ரமணிய சிவா, நோய் வாய்ப்பட்ட பிறகும், தன் போராட்டத்தை தொடர்ந்து நடத்திய தியாக
வரலாற்றுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை!.
மகாத்மா
காந்தி 1919 ஆம் ஆண்டு தமிழகத்தில் பயணம் செய்து, சுதந்திர போராட்டத்திற்கு ஆள் சேர்க்கும்
பணியில் ஈடுபட்டபோது,விருதுநகரில் நடந்த நிகழ்ச்சி.
'வண்டி ரயில்வே நிலையத்தில் நின்ற போது, நிறையபேர்கள்
அவரிடம் வந்து மரியாதை செய்தனர் அப்போது,
அவர் கேட்டார் “உங்கள் ஊரில் எத்தனை பேர்
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட முன்வருகிறீர்கள்?” என்று. அப்போது ஒருவர் மட்டும் “நான்
வருகிறேன்” என்று சொன்னார். அவர் காமராஜர் அல்ல, வேறு ஒருவர். அப்போது காந்தி கேட்டார், “உங்கள் ஊரில்
எத்தனை பேர் இருக்கிறார்கள்” என்று.உடனே “3000 பேர்“ என்று சொன்னார்கள். காந்தி சிரித்துக்கொண்டே
சொன்னார் “3000 பேரில் ஒருவர் மட்டும் தான் சுதந்திர போராட்டத்தில்
பங்கேற்க ரெடியா?“ என்று.’
இப்படி சுதந்திர போராட்டத்தை பற்றியும் அதன் அவசியம் பற்றியும் அறியாதவர்களாகவே
மக்கள் இருந்தனர். ஆதலால் தான் செக்கிழுத்து கஷ்டபட்ட வ.உ.சிதம்பரனார்
ஜெயிலில் இருந்து வெளியே வந்த போது 2 பேர் மட்டுமே வரவேற்றனர்.
பாரதி இறந்த போது 14 பேர் மட்டுமே அவர் இறுதி சடங்கில்
பங்கேற்றனர் என்பதும் வருத்தமான உண்மை.
தனது அறிவாற்றலால், நிறைய நல்ல நூல்களை தமிழில் எழுதியவரும், ஆற்றல் மிக்க வழக்கறிஞராகவும்
செயல்பட்ட சக்கரவர்த்தி இராஜகோபாலச்சாரியார், பல்வேறு போராட்டங்களுடன், உப்பு சத்தியாகிரக
போராட்டத்தை தமிழகத்தில் தலைமை தாங்கி நடத்தியதுடன் எண்ணற்ற அரும்பணிகள் ஆற்றியது, தமிழ்நாடு வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்கதாகும்.
காந்தியின்
அறிவுரையை ஏற்று கள்கடைகளுக்கு எதிராக போராடியவரும்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சுதந்திர போராட்டத்தை
முன்னின்று நடத்தியவருமான பெரியார் ஈ.வே.இராமசாமி
அவர்கள் பணி மறக்க முடியாத ஒன்றாகும்.
மகாத்மாவின் தலைமை ஏற்று, ஒத்துழையாமை போராட்டத்தில்
ஈடுபட்டு தன்னுயிர் ஈந்த கொடிகாத்த குமரனின் வரலாறு என்றும் போற்றத்தக்க தியாக வரலாறு ஆகும்.
மணியாச்சி
ரயில் நிலையத்தில் ஆஸ் என்ற ஆங்கில அதிகாரியை
சுட்டு கொன்றுவிட்டு, வாஞ்சிநாதன் தன்னையே சுட்டு கொன்ற வரலாற்று நிகழ்வு என்றும் எண்ணத்தக்கது.
முழுமையான சுதந்திர போராட்டமாக வெளிப்படாத காலத்தில், சுதந்திரத்திற்காக வீர
முழக்கமிட்ட தீரர் சத்திய மூர்த்தியின் போராட்ட
வரலாறு என்றும் நம் நெஞ்சை விட்டு நீங்காத
வரலாறு.
திருமணம்
செய்யாமல், சுதந்திர போரில் முழுமையாக ஈடுபட்டு,நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் தலைமையை
ஏற்று, 9
ஆண்டுகள் வெஞ்சிறையில் வாடி இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக வீர முழக்கமிட்ட தென்பாண்டிய
வீரர் முத்துராமலிங்க தேவர் வரலாறு தியாகத்தின் வரலாறு ஆகும்.
"மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குள் தமிழர்கள் அனைவரும் செல்லமுடியாது" என்று இருந்த தடையை நீக்க நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவரும், சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்பநித்தவருமான கக்கன் அவர்களின் தியாக வரலாறு என்றும் போற்ற தக்கது
1940 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் தலைவராக, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு
தலைமை ஏற்று, சுதந்திர வேள்வியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய காமராஜரின் பணி, தமிழக
சுதந்திர போராட்ட வரலாற்றின் வெற்றி வரலாறு ஆகும்.
இவ்வாறு முகம் தெரிந்தவர்களாலும், முகம் தெரியாத ஆயிரக்கணக்கான
சுதந்திரப் போராட்ட வீரர்களின் அரும் பணிகளாலும்
1947 இல்
ஆகஸ்டு 15 ஆம் நாளில் சுதந்திரம் கிடைக்கப்பெற்றோம்.
இவ்வாறு
1311 ம் ஆண்டு முதல் அடிமைப்பட்டு கிடந்த தமிழ்நாட்டு சமுதாயம், முழு உரிமை பெற்று
சுதந்திர சமுதாயமாக 1947 ஆம் ஆண்டு உருவானது என்பதுதான் புதிய வரலாறு.
இவ்வாறு எத்தனையோ தலைமுறையாக எண்ணற்ற இன்னல்களை
சுமந்து, நமது முன்னோர்கள் பெற்று தந்த
சுதந்திரத்தின் உயர்வை உணர்ந்து செயல்படுவதே நாம் அனைவரும் அவர்களுக்கு செய்யும் நன்றியாகும்.
நம் வரலாறு
அறிவோம், உழைப்பின் உயர்வு உணா்வோம், உரிமையின் பெருமை உணா்வோம், அதை போற்றி
பாதுகாக்க தொடர்ந்து உழைப்போம்.
References
1. en.wikipedia.org/wiki/Parantaka_Chola_II
3. Mehrdad Shokoohy - Muslim architecture of
South India, Publisher: Routledge
6.
www.indianetzone.com/21/prince_kumara_kampanna_vijayanagar_india.htm
7. Sri Varadarajaswami Temple,
Kanchi: A Study of Its History, Art and Architecture
By K.V. Raman, Abhinav Publications (15 June 2003)
8. A Political and history of the
district of Tinneveli by R.Caldwell
,www.forgotten books .org